நான் உன்னை ரசிக்கிறேன்- வால்பாறை

நலம்விரும்பிக்கு

வால்பாறையில் நான் அதிகம் மனம் மயங்கிக் கிடந்ததெல்லாம் அந்த இயற்கை எனும் பூஞ்சோலையின் மடியில் தவழ்ந்த நாட்களில்தான்.

கிரையோஜெனிக் எஞ்சினியில் செயற்கோளைத் தாங்கியபடி செல்லும் ராக்கெட் போன்ற எந்தவித அவசரமுமின்றி நிதானமாகத் தேயிலைக் காட்டிற்குச் செல்லும் மக்கள்.

கடவுளைச் சந்திக்க பிரார்த்தனையின் மூலம் தவமிருக்கும் பக்தன் போலவும் , மைதானப் புட்கள் வெயிலுக்கு இறையாவது போலவும் காய்ந்து கிடக்கும் கோடைக் காலத்தில் , ஈரப்பசையற்ற புற்களுக்கு நீர் பாய்ச்சும் தோட்டக்காரனைப் போல வான வீதியில் இருந்து மழையூற்றும் மேகம் எனும் பருவகால ஒப்பந்ததாரனின் வருகையை ரசித்தபடியும்;

காணுமிடத்தில் எல்லாம் பச்சை இலை – தழைக்- கொடிகளையெல்லாம் பூமியில் வளரவிட்டு, சூரியன் மறைந்த வானில், மேகவெடிப்புபோல் படாரென்று இடி –மின்னல் வந்து, மழைபெய்யும் மழைக்காலத்தினூடாக, விளையாடுவதற்கு உகந்த நேரம் வருமா? என மந்தமான வானத்தை வேவுபார்த்து, அந்தரத்தில் லேசாய் வெயில்க்காரன் தலைக்காட்டும்போது, மைதானத்தை விலைபேசியதுபோல் அத்தனை மகிழ்ச்சியுடன் விளையாடும் சிறுவர்களின் குதூகலத்தை தரிசித்தபடியும்;

மரங்களின் காதில் அலர்க்கின்ற பூவின் மெல்லிய அசைவுகலை கண் கேமராவில் பதிவு செய்து, அதை இதயப் பெட்டகத்தில் சேகரித்ததையும் எப்படி மறக்க முடியும்!

உறவின்றிப் போனாலும் உனக்கு நானுன்று என்று சொல்லுகின்ற பக்குவப்பட்ட பாசத்தைப் பலதரப்பட்ட மக்களின் அன்பின் மூலம் காணக்கிடைப்பதொன்றும் எளிதல்ல; ஆனாலும் அங்கு இப்போதும் அந்த அன்பு பாரபட்சமின்றிக் கிடைக்குமென்பதை உத்தரவாதமாய்ச் சொல்கிறேன்.

யார் மீதும் நல்லது கெட்டது என்று அறியாமல் பாய்கின்ற வெள்ளத்தையும் தீயையையும் போன்ற வெள்ளந்தியாவனவர்களின் முகச்சாயலில்தான் எத்தனை அமைதி; ஆடம்பரமில்லாத அழகிய புன்னகை; நிதர்சனமான எளிமை; பகட்டில்லாத பாசம்; இருப்பதை வைத்து சிக்கனத்துடன் வாழவேண்டுமென்று திக்கெட்டும் எடுத்துக்காட்டுவதற்கேற்ப பக்குவப்பட்ட வாழ்க்கைமுறை; எப்படியும் கல்விகற்க வேண்டுமென்ற விடாபிடி முயற்சிகள் இவைகளையும் ரசிக்கிறேன்.

ஒரு குழந்தைப்போல் இயற்கையைச் சீவிச் சிங்காரிக்கிற வால்பாறை வாசிகளுக்கு இதைவிட வேறென்ன சொர்க்கம் வேண்டும் இம்மண்ணுலகில்?

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்களுக்கு இடையில் ஊஞ்சல் கட்டி ஆடுவதுபோல் அமைந்துள்ள இயற்கைத்தாயின் பொன்மகள்தான் இந்த வால்பாறை. இதைப்பற்றிப் பேசப்பேச பேரின்பம் சுரங்கும் அடிஞ் நெஞ்சில்தான்!

இங்கு என் ஓவியத்திற்கு விதைபோடப்பட்டது; எழுத்தாற்றலுக்குத் தீனிகிடைத்தது; என்னைக் கவிஞனாக்கியது; இசை ஆர்வலனாகவும் மாற்றியுள்ளது.

இதுபோதாதா இந்த வால்பாறையைப் பற்றி நான் பக்கம் பக்கமாய் எழுத…

சினோஜ்

20-08-22

பின்னூட்டமொன்றை இடுக